நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகள்
இ-பாஸ் நடைமுறையால்
எண்ணிக்கை குறைந்தது..? வியாபாரிகள் கவலை..!!
நீலகிரிக்கு ஒரே நேரத்தில் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருவதால், அங்கு கடும் போக்கு வரத்து நெரிசல் ஏற்படுவதுடன், பசுமையான சுற்றுச்சூழலும் பாதிக்கப்படுகிறது.
இதனை கருத்தில் கொண்டு நீலகிரிக்கு சுற்றுலா பயணிகள் வருவதற்கு இ-பாஸ் நடைமுறையை அமல்படுத்த வேண்டும் என சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
இதையடுத்து நீலகிரியில் இ-பாஸ் நடைமுறை அமலுக்கு வந்தது. இங்கு வரும் சுற்றுலா பயணிகள் அனைவரும் இ-பாஸ் பெற்றே வருகின்றனர்.
இ-பாஸ் விண்ணப்பித்த உடனே கிடைத்து விடுகிறது. இருந்தாலும் பெரும்பாலானோர் இ- பாஸ் எடுத்து செல்ல வேண்டும் என்பதால் வருவதில் சற்று தயக்கமே காட்டி வருகின்றனர்.
நீலகிரியில் அமல்படுத்தப்பட்டுள்ள இ-பாஸ் நடைமுறையால் இங்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை வெகுவாக குறைந்து விட்டது.
நேற்று முன்தினம் தாவரவியல் பூங்காவிற்கு 25,600 சுற்றுலா பயணிகள் வருகை தந்திருந்த நிலையில் நேற்று 11,600 சுற்றுலா பயணிகள் மட்டுமே பூங்காவை சுற்றி பார்க்க வந்துள்ளனர்.
இதேபோல் ரோஜா பூங்காவுக்கு 5 ஆயிரத்து 750 பேரும், குன்னூர் சிம்ஸ் பூங்கா 2,751 பேரும், காட்டேரி பூங்காவுக்கு 555 பேரும், தேயிலை பூங்கா 909 பேரும், மரவியல் பூங்காவுக்கு 80 பேரும் என மொத்தம் ஒரு நாளில் 21 ஆயிரத்து 680 சுற்றுலா பயணிகள் வந்துள்ளனர்.
வழக்கமாக கோடை சீசனையொட்டி ஒவ்வொரு நாளும் சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக இருக்கும். சுற்றுலா தலங்களிலும் கூட்டம் அலைமோதும். வியாபாரமும் களைகட்டும்.
ஆனால் இ-பாஸ் நடைமுறையால் நேற்று ஊட்டியில் உள்ள பெரும்பாலான சுற்றுலா தலங்களில் மக்கள் கூட்டம் குறைந்தே காணப்பட்டது.
இதுகுறித்து வியாபாரிகள் கூறியதாவது:-
தொழில் பாதிப்பு கோடை சீசனில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக இருக்கும் என்பதால் அந்த சமயத்தில் தான், எங்களுக்கு வியாபாரமும் நன்றாக நடக்கும். இந்த சீசன் காலத்தில் நடக்க கூடிய வியாபாரம் மூலமாகவே எங்களுக்கு ஓரளவு வருமானமும் வரும்.
அந்த வருமானத்தை வைத்து தான் சீசன் இல்லாத நேரங்களில் சமாளித்து வருகிறோம். இப்படிப்பட்ட நிலையில் சீசன் நேரத்திலும் இ- பாஸ் நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ளதால் இங்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை குறைந்துள்ளது.
இதனால் வியாபாரம் முற்றிலும் பாதிப்படை ந்து, எங்கள் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது.
நேற்று பதிவு செய்யப்பட்டதாக கூறப்படும் 2 லட்சத்து 80 ஆயிரம் சுற்றுலா பயணிகளில் 40 ஆயிரம் பேராவது வந்திருப்பார்களா என்பது சந்தேகமே. இனி மழை காலம்
தொடங்கி விடும் என்பதால் சுற்றுலா வருமானத்தை மட்டுமே நம்பி வாழும் பல்லாயிரக்கணக்கான வணிகர்கள் வருமானம் இழப்பதோடு அதை சார்ந்து வாழும் பல லட்ச குடும்பங்களும் பாதிப்படையும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
இந்த நிலையில்
இபாஸ் எதிர்த்து விடுதிகளை மூட முடிவு
ஊட்டியில் அமல்படுத்தப்பட்டுள்ள இபாஸ் முறையை ரத்து செய்க்கோரி காட்டேஜ் உரிமையாளர்கள் சங்கம் சார்பில் ஒரு நாள் விடுதிகள் மற்றும் காட்டேஜ்களை அடைத்து எதிர்ப்பை தெரிவிக்க உள்ளதாக சங்கத் தலைவர்கள் கூட்டத்தில் முடிவு செய்ததாக கூறப்படுகிறது.
மேலும்
💠 நீலகிரி மாவட்டத்தில், எதிர்வரும் 10.05.2024 (வெள்ளிக்கிழமை) அன்று 126-வது மலர்க்கண்காட்சி நடைபெறவுள்ளதால், மாவட்டத்திலுள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுகிறது. இந்த நாளில் மாவட்ட கருவூலம் மற்றும் சார்நிலை கருவூலகங்கள், அரசு பாதுகாப்புக்கான அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு குறிப்பிட்ட பணியாளர்களுடன் செயல்படும்.
மேற்கண்ட 10.05.2024 விடுமுறை நாளினை ஈடுசெய்ய எதிர்வரும் 18.05.2024 (சனிக்கிழமை) அன்று இம்மாவட்டத்திற்கு பணி நாளாக இதன் மூலம் அறிவிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மு.அருணா இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
🌳 கே தமிழகம் சேட் ✍️