நீலகிரியில் 140 கிமீ.. 3 மணி நேரத்தில் கோவை.. சிறுவனை காப்பாற்ற மின்னலாய் வந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ஏசுதாஸ் க்கு குவியும் பாராட்டு...!!
நீலகிரி மாவட்டம் கூலூரில் கார் ஒர்க் ஷாப் வைத்து நடத்தி வரும் பிரதீப் என்கிற குட்டன் வசித்து வருகிறார். பிரதீப்பின் மகன் நவநீதன் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 5-ஆம் வகுப்பு படித்து வருகிறார். கோடை விடுமுறை காரணமாக குழந்தைகள் அந்த பகுதியில் விளையாடிக் கொண்டிருந்தார்கள். நவநீதன் தனது நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென எதிர்பாராத விதமாக நவநீதன் கீழே விழுந்துள்ளார்.
அப்போது தரையில் இருந்த மரக்கட்டை நவநீதன் கண்களில் குத்தி அப்படியே சொருகி நின்று கொண்டது. இதனால் சிறுவன் வலியால் அலறி துடித்திருக்கிறான். உடனே அக்கம் பக்கம் இருந்தவர்கள் அவரை மீட்டு அங்கிருந்த தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. நவநீதன் மேல் சிகிச்சைக்காக உடனடியாக கோவை கொண்டு செல்லப்பட வேண்டும் என அங்கிருந்த மருத்துவர்கள் கூறினார்கள். சிறுவனின் தந்தை பிரதீப் அங்கிருந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ஏசுதாஸின் உதவியை நாடினார்.
ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ஏசுதாஸ் சற்றும் தாமதிக்காமல் காயமடைந்த நவநீதனை ஏற்றிக் கொண்டு மின்னல் வேகத்தில் கோவைக்கு புறப்பட்டார். அவர் செல்லும் வழியில் அந்தந்த ஊர்களில் உள்ள ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் உதவியுடன், வாகனப் போக்குவரத்து நெரிசல் மிகுந்த மலைப் பாதையில் மின்னல் வேகத்தில் ஆம்புலன்ஸை ஓட்டி கோவையைச் சென்றடைந்தார்.
3 மணி நேரத்தில் சென்றார்
ஐந்து மணி நேரத்தில் போக வேண்டி கோவைக்கு வெறும் 3 மணி நேரத்தில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ஏசுதாஸ் சென்றார். கோவை தனியார் மருத்துவமனையை சென்றடைந்த நிலையில, சிறுவன் நவநீதனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அறுவைச் சிகிச்சை நல்ல முறையில் நடைபெற்ற நிலையில், ஓரிரு நாளில் சிறுவனுக்கு இயல்பான பார்வை கிடைக்கும் எனவும் மருத்துவர்கள் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்கள்.
கே.தமிழகம்சேட்